
திருமணம் என்றாலே இருமனம் இணைவதுதானே.அப்படி இணைந்த இரு உள்ளங்கள் நிறைவான,நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்களா ? இல்லை என்பதுதான் பெருபாலானவர்களின் ஒருமித்த பதிலாக இருக்கும்.
மணம் பரப்புகின்ற மலர்களைப் போன்ற குடும்ப வாழ்க்கை எத்தனை பேருக்கு அமையப் பெற்றிருக்கிறது. பெற்றோரால் நிச்சயக்கப்பட்ட திருமணமானாலும் சரி, அல்லது காதல் திருமணமாக இருந்தாலும் சரி அண்மை காலமாக அதிகமான எண்ணிக்கை கொண்ட தம்பதிகள் விவாரத்துக்காக குடும்ப வழக்கு நீதிமன்றங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர் என்பது புள்ளி விபரங்கள் தரும் அதிர்ச்சித் தகவல்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றால் விவாகரத்தை எங்கே நிச்சயிக்கிறார்கள் ? இரண்டு மனங்கள் ஒன்றுபட்ட பின்பு பிரிவு என்ற நிலை எப்படி ஏற்படும் ? சூழ்நிலைதான் எல்லாவற்ருக்கும் காரணமா ? அப்படியென்றால் சேர்ந்து வாழ் அந்த்ச் சூழ்நிலை வழி ஏற்படுத்தித் தராதா ?
வாழ்க்கை என்பது பரஸ்பர நம்பிக்கையின் மீது எழுப்பப்படும் உயர்ந்த கோபுரம். எத்தனை துன்பங்கள் வந்தபோதிலும் இணைந்த கைகள் இறுக வேண்டும். அது சற்றே தளர்ந்தாலும் தாம்பத்தியம் சறுக்கி விடும். எல்லாவற்றையும் ஆரம்பித்து வைக்கும் மனிதனுக்கு அதை எப்படி முடிப்பது என்பது தெரிவதில்லை. வாழ்க்கை என்பதே முடிவு தெரியாமல் அதை நடத்திக்கொண்டிருப்பதுதான். பல அனுபவங்களைப் பெற்று முதிர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கே சில நேரம் வாழ்க்கை பயத்தையும்,திகைப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.
எதிர்பார்ப்புகளோ, ஏமாற்றங்களோ இல்லாத நேர்மையான் ஒரு துளி அன்பு அந்த உலகிலிருந்து கிடைத்தாலும் அதை விட்டுவிட மனம் உடன்படுவதில்லை. குடும்ப அமைப்பு சேதப்படாத பட்சத்தில் அதை விட்டுவிட வேன்டிய அவசியமேயில்லை. தேவை, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் பரந்த மனம் மட்டுமே. எஅவரிடத்தில் விட்டுக்கொடுத்தல் இல்லையோ அங்கே தான் பிரச்சினைகள் உருவெடுக்கிறது. மேலும்,விட்ட்டுக் கொடுத்தலிலும், புரிந்தணர்தலிலும்தான் உண்மையான அன்பு ஊற்றெடுக்கும்.
கணவன்-மனைவி இருவரும் தலைகனத்தை முற்றிலும் களைய வேண்டும். படித்து விட்டோம் என்ற அகந்தை அறவே இருக்கக் கூடாது. இது கூட மன் முறிவுக்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. தவறு செய்வது மனித இயல்பு. கணவன்-மனைவி இருவரில் யார் தவறிழைத்து விட்டாலும் மற்றவர் மன்னிக்க வேண்டுமேயொழிய அதை ஒரு பூதக்கண்ணாடி வைத்து பார்த்து பெரிது படுத்தாமல் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி உடனுக்குடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
வருடத்திற்கு முன்னூறு விவாகரத்து வழக்கு என்றிருந்த நிலை, அண்மை காலமாக ஆயிரங்களாக அதிகரித்துள்ளது. விவாகரத்து அதிகளவில் வருவதற்கு நிலவி வரும் சமுதாய அமைப்பும் ஒரு காரணம் எனப்படுகிறது. முந்தைய காலங்களில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் சகித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றைய பெண்கள் நேர்மாறாக உள்ளனர். சகிப்புத் தன்மையற்றவர்களாக அதே நேரத்தில் பிரச்சினைகளைக் கையாளும் விதத்திலும் தெளிவற்ற முறையை தான் கடைப்பிடிக்கிறார்கள்.
முன்பெல்லாம் மணவாழ்க்கை வேண்டாம் என்று வேண்டுவோரில் பத்து சதவீதம்பேர் தான் பெண்கள். ஆனால், நிலைமையே தலை கீழ். இன்று, எழுபது சதவீதம் வரை மகளிர் என்பது அதிர்ச்சித் தர கூடிய உண்மை.
புகுந்த வீட்டில் தன் கணவனுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் இருந்தபோதிலும் அவளுக்கு கனவன் என்பவன் தான் முதல் உறவு.இந்த உறவே இறுதி வரை அவளுடன் வரக்கூடியது . இந்த உறவு வெரும் உடலின்பத்துக்கு மட்டுமல்ல. காமம் என்பது சரீரம் தொடர்பான ஒருவகை மயக்கம். அது உடம்பிலேயே தொடங்கி உடம்பிலேயே நின்று விடும். ஆனால், தெளிந்த நீரோடை போன்ற தூய்மையான அன்பு மட்டும் தான் இறுதி வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.
வாழ்க்கை என்பது சட்டையைக் கழற்றிவிட்டு வேறு சட்டையை மாற்றிக்கொள்வது போன்றதன்று. அதிலும் கணவனிடம் அடம்பிடித்து ஜீவனாம்சம் பெற்ற காலம் மலையேறிவிட்டது. எதுவும் வேண்டாம் ஆளை விட்டால் போதும் என்று விவாகரத்து கோருவோரில் பெண்கள் அதிகம்.
நானும் சம்பாதிக்கிறேன். என்னாலும் தனித்து வாழ முடியும் என்ற தப்பான கருத்தை தெரிந்தோ தெரியாமலோ தங்களுக்குள் விதைத்துக் கொள்கிறார்கள்.
விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே கணவன்-மனைவி இருவருக்குமே கவுன்சிலிங் நடத்தி கருத்து வேறுபாடுகளை களைய நிதிமன்றம் முயற்ச்சிப்பது வழக்கம்.ஓரளவே பலன் தந்த இந்த கவுன்சிலிங் இப்போது வெறும் சம்பிரதாயமாகி விட்டது. மாறி வரும் தலைமுறையின் மனோபாவங்களை அறிந்து கொள்ள முடியாத உளவியல் நிபுணர்கள் ஒரு பக்கம் ஒத்துழைக்கவே கூடாது என்ற எண்ணத்தில் கவுன்சிலிங்கை அணுகும் தம்பதிகள் மறுபக்கம்.இதனாலோ என்னவோ சமரசம் தோற்று விவாகரத்து ஒன்றே ஒரே வழி என்ற நிலை வந்து விடுவதை யாராலும் தடுக்க முடிவதில்லை.
ஆண் சம்பாத்திக்க வேண்டும், பெண் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டுமென்ற நியதி ரொம்பவே மாறி வருகிறது. அதற்கு ஏற்றார்போல் விதவிதமான பன்னாட்ட்டு நிறுவனங்கள் கால் சென்டர்கள், கணிணி மென்பொருள் நிறுவனங்கள் இப்படி நித்தம், நித்த்ம் பல பன்னாட்டு நிறுவனங்கள் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, அவர்களுக்கு கை நிறைய ஊதியமும் கிடைக்கச் செய்கிறது. பொருளாதார ரீதியாகவும் ஆனைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனதால் பெற்றோரையும்,உற்றாரையும் கலந்தாலோசிக்காமல் அவசர கத்யில் முடிவெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இரண்டு பேரும் வேலைக்கு போவதால் இறுக்கமாகும் சூழல் மனைவியைவிட கணவன் சம்பாதித்தால் உண்டாகும் ஈகோ, அத்தோடு சின்ன,சின்ன ஊடல்கள் கூட பெரிய பிரச்சினையாக உருவெடுப்பது இவையெல்லாம் சேர்ந்து விவாகரத்துக்கு வித்திடுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
மொத்ததில் உண்மையான அன்போடு விட்டுக் கொடுப்பவர்களின் மண வாழ்க்கை என்றுமே கெட்டுப்போகாது என்பதை ஒவ்வொரு தம்பதியரும் மனதில் பதித்தால் தினந்தோறும் ஆனந்தமே!

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு